திருப்பூர் பாளையங்காடு பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சேலத்தைச் சேர்ந்த சக மாணவருடன் சென்னையில் இருந்து திருப்பூர் செல்வதற்காக சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா ரயில் பெட்டியில் பயணம் செய்தனர். சேலத்திற்கு ரயில் வந்தபோது பேக்கில் இருந்த லேப்டாப்பை காணவில்லை. சேலம் ரயில்வே போலீசாரிடம் அந்த பெண் புகார் அளித்தார். இதையடுத்து ரயில்வே போலீஸ் அதே ரயிலில் பயணம் செய்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லேப்டாப் திருடியது சென்னை பல்லாவரம் வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அழகுசுந்தரம் (வயது 23) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் தெலுங்கானா மாநிலம் மியோபூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் சாய்குமார் (35), இவர் சொந்த வேலை காரணமாக கடந்த 20ம் தேதி தாம்பரத்தில் இருந்து சேலத்துக்கு ரயிலில் வந்தார். இருக்கையில் வைத்திருந்த லேப்டாப் பேக் மற்றும் அதில் வைத்திருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சேலம் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி லேப்டாப் பேக்கை திருடிய காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மகன் கோபால் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.