சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி சமத்துவபுரத்தின் பின்புறத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேங்கல் கரடு உள்ளது. இந்த கரட்டில் செடி, கொடி, மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கரடு பகுதியில் ஆடுகள், மாடுகளை மேய்த்து வந்தனர். தற்போது கடுமையான வறட்சி நிலவி வருவதால் கரடு பகுதி காய்ந்து சருகுகள் அதிகளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென தேங்கல் கரடு பகுதி தீப்பற்றி எரிந்தது. இது பற்றிய தகவல் அறிந்த காடையாம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் நிலைய அலுவலர் ராஜசேகர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த காட்டு தீயினால் கரடு பகுதியில் இருந்த செடிகள், மரங்கள் எரிந்து கருகின.