பரமக்குடியில் சரக்கு வாகனத்தில் 60 மூட்டைகளில் கடத்திச் செல்லப்பட்ட 3 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலா்கள் நேற்று இரவு பறிமுதல் செய்தனா்.
பரமக்குடி நியாயவிலைக் கடைகளிலிருந்து ரேஷன் அரிசி தொடா்ந்து கடத்தப்பட்டு வருவதாக வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வட்ட வழங்கல் அலுவலா் கீதா தலைமையில் பணியாளா்கள் பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அந்த வாகனத்திலிருந்த ஓட்டுநா் உள்பட மூவரும் அங்கிருந்து தப்பியோடினா்.
இதையடுத்து, வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் 60 மூட்டைகளில் 3 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, ரேஷன் அரிசி, சரக்கு வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அரிசியை உணவுப்பொருள் சேமிப்பு கிடங்குக்கு கொண்டு சென்றனா்.
மேலும், இதுகுறித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.