தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மலிவு விலை மருந்தகம் திறப்பு
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மலிவு விலை மருந்தகத்தைக் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நேற்று (நவம்பர் 13) திறந்து வைத்தார். இந்தியாவில் இதுவரை 14,300 மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 1,270 கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 53 கடைகள் உள்ளன. இந்நிலையில், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மலிவு விலை மருந்தகத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார். தஞ்சாவூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேயர் சண். ராமநாதன், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம். எஸ். அன்பழகன், திருச்சி கோட்ட முதன்மை வர்த்தக மேலாளர் வி. ஜெயந்தி, மலிவு விலை மருந்தக திட்டத்தின் தமிழ்நாடு தலைவர் ஏ. நாராயணா, திருச்சி திட்ட மேலாளர் நஷீர் அஹமத், மாமன்ற உறுப்பினர் பி. ஜெய் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், காரைக்கால், வேலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும் மலிவு விலை மருந்தகம் திறக்கப்பட உள்ளது என்றும், இந்த மலிவு விலை மருந்தகத்தின் மூலம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கும், உள்ளூரில் வசிக்கும் பொதுமக்களுக்கும் தங்களுக்கு தேவையான மருந்துகளை வாங்கிப் பயன்படுத்த முடியும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.