

புதுவையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது
திருவண்டார் கோயில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதகடிப்பட்டை சேர்ந்த அரசு என்பவர் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை பள்ளியின் வளாகத்தில் உள்ளே நிறுத்திவிட்டு பள்ளியை திறக்கும் பணியில் ஈடுபட்டு வந்தபோது மர்ம நபர் ஒருவர் பள்ளியின் கேட்டை திறந்து பள்ளியின் உள்ளே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்வதை பார்த்து துரத்திச் சென்றும் அவரை பிடிக்க முடியவில்லை. இதனை அடுத்து அவர் திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பள்ளியின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்டவனை தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கதிரேசன் தலைமையில் குற்றப்பிரிவு காவலர்கள் அசோக் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோருடன் மதகடிப்பட்டை ஆண்டியார்பாளையம் கல்தாகுப்பம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது நபர் ஒருவர் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அவரைப் பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்த பொழுது அவர் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே வசித்து வரும் வசந்த் என்பதும், அவர் திருவண்டார் கோவில் பள்ளியில் உள்ள வாகனத்தை திருடி வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் அவர் ஓட்டி வந்த திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.