புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். மேலும் முதல் நாளே பாடப் புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட விலையில்லா எழுத பொருட்களும் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி நகர பகுதியில் உள்ள எக்கோல் ஆங்கிலேஸ் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் புதுச்சேரி உருளையன்பேட்டையை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவன் ஹரிகரன் அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றதால் அவரை கௌரவிக்க வகையிலும், அதேபோன்று உப்பளம் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஜோஸ்வா 100% வருகை புரிந்ததற்காக இவரை பாராட்டு வகையிலும் இரண்டு மாணவர்களையும் ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்க வைத்து பாராட்டப்பட்டது.
பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்ட மாணவர்கள் ஹரிஹரன் மற்றும் ஜோஸ்வாவிற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இனிப்புகள் வழங்கியும் சால்வைகள் அணிவித்து பூங்கொடுத்தும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற மாணவர்கள் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.