புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளர் சிரஞ்சீவி மற்றும் தலைமை காவலர் வேல்முருகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணவெளி தந்தை பெரியார் அரசு பள்ளி அருகில் மூன்று வாலிபர்கள் நின்று பாலுத்தின் பைகளை வைத்து கொண்டு சந்தேகத்திற்கு இடமாக அங்கும், இங்குமாக நடமாடிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் சோதனை செய்த போது அவர்கள் வைத்திருந்த பாலிதின் பையில் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் வெங்கடேசன் என்ற வெங்காயம் (22), சௌந்தர். (21), பாலா (20), என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களை சோதனை செய்து பார்த்ததில் அவர்கள் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான 110 கிராம் காய்ந்த கஞ்சா இலைகளை சிறு சிறு பொட்டலமாக 21 பாக்கெட்டுகளில் வைத்திருந்தனர்.
மேலும் விசாரணையில் அவர்கள் பழனிமலை அடிவாரத்தில் லோடு கேரியர் வண்டி ஓட்டும் அடையாளம் தெரியாத நபர்களிடம் காசு கொடுத்து வாங்கி வந்து, வீட்டில் வைத்து சிறுசிறு பொட்டலமாக போட்டு, அதனை அரியாங்குப்பம் பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ரூ. 500 க்கு விற்று வந்ததாக மூன்று நபர்களும் ஒப்புக் கொண்டனர்.
எனவே அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.