புதுச்சேரி வணிகவரித்துறையில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை

1551பார்த்தது
புதுச்சேரி வணிகவரித்துறையில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை
புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடியில் வணிகவரித்துறை அலுவலகம் உள்ளது. அரியூரை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பேக் தயாரிக்கும் நிறுவனத்தில் வணிக வரித்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு சோதனை நடத்திய போது வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. வரி மற்றும் அபராதம், பிற கட்டணங்களுடன் சேர்த்து சுமார் ரூ. 12 லட்சத்து 35 ஆயிரம் செலுத்த வேண்டி இருந்தது.

ஆனால் வரி ஆலோசகர் கூறியதன் பேரில் செல்வராஜ் வணிகவரி அதிகாரிகளுக்கு லஞ்சமாக ரூ. 2 லட்சம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டு அதிகாரி முத்துக்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 6-ம் தேதி புதுச்சேரி வணிக வரித்துறை அலுவலகத்துக்கு வந்து 16 மணி நேரம் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

மேலும் லஞ்சம் பெற்றதாக உதவி வணிகவரி அதிகாரிகள் ஆனந்தன், முருகானந்தம், வரி ஆலோசகர் மற்றும் லஞ்சம் வழங்கிய தனியார் நிறுவன உரிமையாளர் செல்வராஜ் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் விவரங்களை சேகரிக்கும் வகையில் சிபிஐ அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் மீண்டும் புதுச்சேரி வந்து வணிகவரித்துறை அலுவலகத்தில் அங்கு மீண்டும் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி