பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோயிலில் ஆக 9ம் தேதி பூச்சொரிதல் விழாவோடு திருத்தேர் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து ஆக. 15ஆம் தேதி காப்பு கட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அருள்மிகு மன்னாத சுவாமி, பச்சையம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மலர் அலங்காரத்துடன் திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இதனையடுத்து நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் குளக்கரையிலிருந்து சக்தி அழைக்கப்பட்டு மேளதாளம் முழங்க பக்தி பரவசத்துடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீமித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த திருவிழாவில் சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குலதெய்வ வழிபாட்டாளர்கள்10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பச்சையம்மனை மனம் உருக தரிசனம் செய்தனர்.