குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்று அழைக்கப்படும் செடி இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக காணப்படுகிறது. இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் மொத்த மலையும் நீல நிறத்தில் தோன்றுவதால், நீலகிரி மலை என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த குறிஞ்சி செடிகளில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் உள்ளன. இவற்றில் 150 வகைகள் இந்தியாவில் மட்டுமே உள்ளன. அதில் குறிப்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சி மலைகள், நீலகிரி, மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே இருக்கின்றன. பண்டைய தமிழர்கள் நிலவகைகளை குறிப்பிட்ட மலையும் மலை சார்ந்த நிலத்தை "குறிஞ்சி" என்று குறிப்பிடக் காரணம் இந்த குறிஞ்சி மலர்கள் தான் என்கிறார்கள்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் எப்பநாடு அருகே பிக்கப் பத்தி மந்து மலை பகுதியில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்திருக்கின்றன. இதனை காண ஆர்வத்துடன் பலர் செல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும் புலி, யானை, கரடி உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இதனால் நீலகிரியில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களை காண சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடைவித்துள்ளது. தடையை மீறி சென்றால் அபராதம் விதிக்கப்படும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.