ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருவதால் காய்கறி மற்றும் தேயிலை செடிகளுக்கு உரமிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்க்கும். இச்சமயங்களில் அனைத்து நீரோடைகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் காணப்படும். அதேபோல் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள், குட்டைகள் மற்றும் குளங்களில் அதிகளவு தண்ணீர் காணப்படும். இதனை வைத்துக் கொண்டு விவசாயிகள் பயிர் செய்வது வழக்கம். ஆனால், இம்முறை ஜூன் மாதம் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாக கடந்த வாரமே துவங்கியது. கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. கடந்த மாதம் போதிய மழை கிடைக்காத நிலையில், உரமிடும் பணிகள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் தெளிக்கும் பணிகளை மேற்கொள்ளாமல் தாமதித்து வந்தனர். கடந்த ஒரு வாரமாக ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் பூச்சிக் கொல்லி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, கேரட், உருளைக்கிழங்கு போன்ற பயிர்களை பூச்சிகள் தாக்காமல் இருக்க பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகிறது. அதேபோல், பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் விவசாயிகள் உரமிடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.