குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் பசுமை நிறைந்த மலைகள், தேயிலைத் தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் ரயில் நிலையங்கள் என இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தோட்டக்கலைத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கோடை விழாவில், இதுவரை காட்டேரி பூங்காவில் எந்த கண்காட்சியும் நடத்தப்படவில்லை.
முதல் முறையாக, இந்த ஆண்டு மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக, நீலகிரியின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்தப் பூங்காவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கண்காட்சியின்போது, தேயிலை, காபி, ரப்பர் போன்ற பணப்பயிர்கள், தேங்காய், பனை, நுங்கு, இளநீர், கொக்கோ, பாக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான விளைபொருட்கள் மற்றும் அலங்கார வடிவமைப்புக்கள் இடம் பெற உள்ளன. ஏற்கனவே, 2 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. பூங்காவை வண்ணமயமாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.