பல தலைமுறைகளாக, கோயில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கக் கோரி, நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில், கீழ்வேளூா் பிள்ளைத் தெருவாசல் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:
நாங்கள் கீழ்வேளூா் பிள்ளைதெருவாசல் பகுதியில் நூறாண்டுகளுக்கு மேல் தலைமுறை, தலைமுறையாக வசித்து வருகிறோம். கோயில் இடம் என்பதால் அதற்கான வாடகையும் முறையாக செலுத்தி வருகிறோம். எங்கள் பகுதிக்கு பட்டா வழங்கக் கோரி பல போராட்டங்களில் ஈடுபட்டோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பட்டா இல்லாததால் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதனிடையே இந்து சமய அறநிலையத் துறையினா், பிள்ளைத் தெருவாசலில் உள்ள குடியிருப்புகளை காலிச் செய்ய நெருக்கடி கொடுக்கின்றனா்.
எனவே, உடனடியாக நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். குடியிருப்பை காலி செய்ய நிா்பந்திக்கும் இந்து சமய அறநிலையத்துறையினா் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.