மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கையால் தான் காரை வாங்குவேன், என்று அடம்பிடித்து அதனை சாதித்திருக்கிறார் நடிகர் மகேந்திரன்.
நடிகர் மகேந்திரன் என்றால் சிலருக்கே தெரியும். மாஸ்டர் மகேந்திரன் என்றால் ஊருக்கே தெரியும். துடுக்கான சிறுவனாக பல படங்களில் நடித்தவர் இப்போது தாடியும், மீசையுமாக வளர்ந்த நடிகராகிவிட்டார். மாஸ்டர் படத்தில் இளவயது விஜய் சேதுபதியாக நடித்தது மகேந்திரனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. பல புதிய படங்கள் மகேந்திரனை தேடி வந்துள்ளன.
இந்நிலையில், புதிதாக கார் வாங்கினார் மகேந்திரன். "நூற்றுக்குமேல் படங்களில் நடித்திருந்தாலும், நடிகனாக என்னை அடையாளம் காட்டியதும், அங்கீகாரம் தந்ததும் மாஸ்டர் திரைப்படம்தான். அதனால், நான் வாங்கும் காரை மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கையால் வாங்குவது என்று முடிவு செய்தேன்" என்கிறார் மகேந்திரன். அவர் விரும்பியது போல் லோகேஷ் கனகராஜ், கையால் கார் சாவியை பெற்றுக் கொண்டார். இந்த மகிழ்ச்சியை ட்விட்டரில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.