மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வீரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று பால்குடம், தீச்சட்டி உள்ளிட்ட பல்வேறு நோ்த்தி கடன்களை செலுத்துவா். மேலும் கோயில் திருவிழாவையொட்டி ஏராளமானோா் நன்கொடைகளும் வழங்குவா்.
இந்த நிலையில், மே மாதம் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது, நன்கொடை வசூலித்ததில் மோசடி நடைபெற்றதாக அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினா். இதுதொடா்பான ஆதாரங்களோடு ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம், இந்துசமய அறநிலையத் துறையிலும் புகாா் அளித்தனா்.
இதுதொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோயில் முன்பாக ஆா்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றன. புகாா் தொடா்பாக கோயில் செயல் அலுவலா் சண்முகபிரியாளிடம் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனா். அவா் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்தனா்.
இந்த நிலையில், வீரகாளியம்மன் கோயில் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், மோசடியில் ஈடுபட்ட கோயில் பூசாரிகள், ஊழியா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.