தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் நாடு முழுவதிலும் உள்ள பஜார் பகுதிகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாநகரின் பிரதான சந்தை பகுதியான மதுரை மாநகர் மாசி வீதிகள், கீழவாசல், விளக்குத்தூண், காமராஜர் சாலை , பைபாஸ் சாலை, அண்ணாநகர் ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த வியாபாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பாகவே தீபாவளி விற்பனை தொடங்கி ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் ஆடைகள் , நகைகள் , வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்கு வருகைதந்த நிலையில் இந்த ஆண்டு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டாததால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுவது வியாபாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி விற்பனையை வாழ்வாதாரமாக கொண்டுள்ள சாலையோர வியாபாரிகள் போதிய விற்பனை இல்லாத நிலையிலும் பொதுமக்கள் வருகை குறைந்த நிலையிலும் கவலையில் உள்ளனர். பொதுமக்கள் வருகை தருவார்கள் என்பதால் காவல்துறை தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையிலும் மதுரை மாசி வீதிகள் முழுவதிலும் ஆட்கள் நடமாட்டம் என்று வெறிச்சோடி காணப்படுகிறது.