தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு, மதுரை அமர்வில், " நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள், மண்டபங்கள் சிதிலமடைந்து வருகின்றன. இவற்றை பழமை மாறாமல் சீரமைத்து பராமரிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
நெல்லை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி, "மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க பல கட்டங்களாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இரண்டாவது கட்டப்பணிகள் டிசம்பர் மாதம் நிறைவடைந்து விடும். மூன்றாவது கட்டப்பணி 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்து விடும். அதன்பிறகு நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் நேரிடையாக கலக்காது" என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், "வரும் ஞாயிற்றுக்கிழமை நாங்கள் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட தாமிரபரணி பகுதியில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளையும் பிற பகுதிகளையும் நேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளோம். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர். அதோடு, மனுதாரர் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் இடத்தோடு வீடியோ பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றார்.