மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தானில் வாடகை கடை வணிகர்கள் ஜி.எஸ்.டி.யை கண்டித்து இன்று முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. வாடகை கடையில் வியாபாரம் செய்து வரும் வணிகர்களுக்கான ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இதற்கு நாடு முழுவதிலும் உள்ள வணிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு இடையில் தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரை அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து இன்று (நவம்பர் 29) கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சோழவந்தானில் உள்ள வணிகர்கள் தங்கள் கடையினை அடைத்து மத்திய அரசுக்கு இந்த போராட்டத்தின் மூலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சோழவந்தான் பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருள் வாங்குவதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.