மதுரை பாசனத்திற்காக சாத்தியார் அணை திறந்த அமைச்சர் மூர்த்தி

70பார்த்தது
மதுரை பாசனத்திற்காக சாத்தியார் அணை திறந்த அமைச்சர் மூர்த்தி
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணையிலிருந்து பாசனத்திற்கான தண்ணீரை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பாலமேடு அருகே அமைந்துள்ளது சாத்தியார் அணை. 29 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் கீழச்சினம்பட்டி, எர்ரம்பட்டி, மேல சின்னம்பட்டி உள்ளிட்ட 10 கண்மாய்களும், மேலும் நேரடியாய் 450 ஏக்கரும் விளைநிலங்களும், பல்வேறு கண்மாய்கள் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பாலமேடு பேரூராட்சியின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது.

இந்நிலையில் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக அணை வெகுவாக நிரம்பி தற்போது மறுகால் பாய்ந்து வருகிறது.

அணைக்கு தற்போது 19 கன அடி நீர் வந்து உபரிநீராக மறுகால் பாய்ந்து வரும் நிலையில் இன்று பாசன வசதிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவின்படி 35 கன அடி நீரினை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி திறந்து வைத்தார்.

இன்று முதல் 18 நாட்களுக்கு அணையிலிருந்து நீர் பாசனத்திற்காக வழங்கப்படுவதாக கூறிய அமைச்சர் பி. மூர்த்தி மழைப் பொழிவைப் பொறுத்து நீர் வழங்குவது முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி