மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் வைகை ஆற்றில் கடந்த 2022 ஆகஸ்ட் 9ம் தேதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் மீட்கப்பட்டது. அவர் யார் என்பது குறித்த தற்கொலை வழக்கு போலீஸ் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று சோழவந்தான் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் மதுரை சொக்கலிங்க நகர் செந்தில் (வயது 48), சம்மட்டிபுரம் சையது ஜாபர் அலி (வயது 41) ஆகியோர் சரணடைந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதுரை வில்லாபுரம் பாலமுருகனை (வயது 35), பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்து ஆற்றில் வீசி சென்றதாக வாக்குமூலம் அளித்தனர். மேலும் சமீபத்தில் நண்பர்களுடன் மது அருந்திய போது போதையில் கொலை குறித்து உளறியதாகவும், இது பாலமுருகன் நண்பர்களுக்கு தெரிந்ததால் போலீசார் எப்படியும் கைது செய்வார்கள் என்ற அச்சத்தில் சரணடைவதாக கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சோழவந்தான் போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் இறந்த பாலமுருகன் பண விவகாரத்தில் தலைமறைவாவது வழக்கம் என்பதால் அவரது குடும்பத்தினர் அவரை தேடாமல் இருந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.