கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கொசூர் கடைவீதியில் மத்தகிரி ஊராட்சிக்கு சொந்தமான 1. 35 ஏக்கர் நிலம மற்றும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சிக்கு சொந்தமான 43 சென்ட் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வணிக ரீதியான கடைகள் கட்டப்பட்டன.
அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிருஷ்ணராயபுரம் யூனியன் நிர்வாகம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அகற்ற வந்துள்ளது. அப்போது சிலர் ஆக்கிரமிப்பு அகற்ற தடை செய்ய வேண்டுமென மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தனர்.
நீதிமன்ற விசாரணையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், அதற்கு 8 வாரம் கால அவகாசத்திற்குள் அவர்களாகவே அகற்றி கொள்ள வேண்டுமெனவும், இல்லாவிடில் வட்டாட்சியர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து கடவூர் வட்டாட்சியர் முனிராஜ், கிருஷ்ணராயபுரம் யூனியன் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல்துறையினர் உதவியுடன் வந்தனர். அப்போது அங்கு கடை நடத்தி வந்த ராஜேஷ், விசாலாட்சி ஆகிய இருவரும் தங்களது கடைகளை அகற்றக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக்கொள்ள முயன்றனர்.
உடனே அவர்களை தடுத்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.