ஆழ்துளை கிணறு பழுதுபார்க்கும் போது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு.
க. பரமத்தி அருகே ஆழ்துளை கிணறு பழுதுபார்க்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி இருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு. கிராமத்தில் நடந்த சோக நிகழ்வு.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், க. பரமத்தி அருகே கிரசர்மேடு என்ற பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில், முன்னுர் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் மூன்று ஊழியர்கள் நேற்று மாலை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக இயந்திரம் அருகில் இருந்த மின்சார கம்பி மீது மோதியதில் பணியில் ஈடுபட்டிருந்த சதீஷ் , பாலு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மற்றொருவர் எவ்வித காயம் இன்றி உயிர் தப்பினார்.
அருகில் இருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உயிரிழந்த இருவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து க. பரமத்தி காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.