களியக்காவிளை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை படந்தாலுமூடுபகுதியில் சாலை ஓரம் நின்ற பல வருடங்கள் பழமை வாய்ந்த பெரிய மாமரத்தின் கிளை முறிந்து விழுந்தது , இந்த கிளை சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு காரின் மீது விழுந்தது, இதில் கார் அப்பளம் போல் உடைந்தது. காரில் கொல்லங்கோட்டை அடுத்த மஞ்சதோப்பு பகுதியை சேர்ந்த மூன்று வாலிபர்கள் இருந்துள்ளனர். அவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். அவர்கள் கலியக்காவிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டு இருந்தது தெரிய வந்தது. இந்த விபத்தினால் அப்பகுதி போர்க்களம் போல் களேபேரமாக மாறியது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு இரண்டு பகுதிகளிலும் பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதை அடுத்து உடனடியாக குழித்துறை தீயணைப்பு துறையானர் மற்றும் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் விரைந்து வந்த அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் மர கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.