திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசித்திருவிழா கடந்த 31-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-வது நாளான நேற்று ( 4-ம் தேதி) இரவு கோவிலின் உள்ளே உள்ள திருவம்பாடி கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம் நடந்தது.
கோகுல் தந்திரி, கருட இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியை பூஜை செய்து கொடிமரத்தில் ஏற்றினார்.
விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு பரதநாட்டி யம், சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தொடர்ந்து கதகளி ஆகியவை நடக்கிறது. நாளை (புதன்கிழமை) இரவு 9 மணிக்கு சாமி பல்லக்கில் பவனி வருதல், கதகளியும், 9-ந்தேதி காலை 6 மணிக்கு ராமாயண பாராயணம், காலை 11 மணிக்கு திருவிளக்கு எழுந்தருளல், இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி, கருட வாகனத்தில் சாமி ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு எழுந்தருளல், நள்ளிரவு 1 மணிக்கு குசேலவிருத்தம் கதகளி ஆகியவையும் நடக்கிறது.