அருமனை அருகே புண்ணியம் என்ற பகுதியில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. அதே பகுதியைச் சேர்ந்த ரகுராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதை நடத்தி வருகின்றனர். சம்பவ தினம் முதியோர் இல்லத்திற்கு வாலிபர் ஒருவர் முக கவசம் அணிந்து வந்து தன்னை சிஆர்பிஎஃப் வீரர் என அறிமுகம் செய்து, பின்னர் தங்களது கேம்பில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களை முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு சலுகை விலையில் வழங்குவதாக கூறியுள்ளார். மேலும் பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை ஆர்டர் எடுத்து, அதற்காக ரூபாய் 42,500-ஐ முதியோர் இல்ல நிர்வாகிகள் கொடுத்துள்ளனர்.
பின்னர் "என்னுடன் கேம்ப் அலுவலகம் வாருங்கள்" என அழைத்துச் சென்று, அவர்களை மார்த்தாண்டம் பகுதியில் இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். ரகுராஜன் நீண்ட நேரம் காத்திருந்து அந்த வாலிபர் கொடுத்த எண்ணுக்கு அழைத்தபோது செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் திரும்பி வந்து பின்னர் முதியோர் இல்லத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மோசடி உருவகாட்சியுடன் அருமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து நூதன முறையில் பணத்தை திருடி தப்பிச் சென்ற மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.