அருமனை அருகே செண்பகத்தரிசு பகுதியைச் சேர்ந்தவர் நேசன் மகன் கிறிஸ்டோபர் (55). இவர் சொந்தமாக ரப்பர் மரங்கள் வைத்து விவசாயம் செய்து வந்தார். திருமணம் செய்து கொள்ளாததால் இவர் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று (23-ம் தேதி) மதியம் கிறிஸ்டோபரின் வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசி உள்ளது. உடனடியாக இது குறித்து அப்பகுதி மக்கள் ஆறுகாணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டை உடைத்து உடலை பார்வையிட்டனர்.
அப்போது கிறிஸ்டோபர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்து விட்டது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் கிறிஸ்டோபர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கிறிஸ்டோபர் எப்படி இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது மர்ம சம்பவமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.