நாகர்கோவில் மாநகர பகுதிகளில் உள்ள சில இடங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை என மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று இரவு மாநகர மேயர் மகேஷ் வடசேரி பஸ் நிலையம் மற்றும் ஆம்னி பஸ் நிலையங்கள் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அவருடன் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர். முதலில் ஆம்னி பஸ் நிலையம் மற்றும் அதன் வளாகம் முழுவதும் உள்ள பகுதிகளில் விளக்குகள் எரிகிறதா? என மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். தொடர்ந்து வடசேரி பஸ் நிலையத்திலும், அங்கிருந்து அண்ணா விளையாட்டு அரங்கம், பாலமோர் சாலை, மணிமேடை ஆகிய பகுதகிளில் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை யோரம் இருந்த சில ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் நடைபாதையில் வைத்திருந்த பொருட்கள் ஆகியவற்றை அகற்ற அதி காரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவற்றை கடை ஊழி யர்கள் அகற்றினர். தொடர்ந்து மணிமேடையில் இருந்து வேப்பமூடு, அண்ணா பஸ் நிலையம் ஆகிய பகுதிகளிலும் நடந்தே சென்று ஆய்வு செய்தார். அப்போது சில இடங்களில் மின்விளக்குகள் எரியாததை கண்டு, அவற்றை நீக்கி உடனே புதிய விளக்குகள் பொருத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் சில இடங்களில் எல். இ. டி. விளக்குகள் பொருத்தவும் உத்தரவிட்டார்.