குளச்சலில் களைக்கட்டிய நெத்திலி மீன் சீசன்

576பார்த்தது
குளச்சலில் களைக்கட்டிய நெத்திலி மீன் சீசன்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. கடந்த சில நாட்களாக குளச்சலில் மீன் பிடி சீசன் மந்தமாகி உள்ளதால் மீன் வரத்து குறைந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக குளச்சலில் மீன் பிடித்தொழில்  பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது குளச்சல் கடல் பகுதியில் கேரை மீன்கள் சீசனாகும். ஆனால் ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகளில் கேரை மீன்கள் கிடைக்கவில்லை.
இதற்கிடையே கட்டுமரங்களில் பிடிக்கப்படும் சாளை, நெத்திலி போன்ற மீன்களும் கிடைக்கவில்லை. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் சாளை, நெத்திலி மீன்களை பிடிக்க செல்ல ஆர்வம் காட்டாத நிலையில் ஒரு சில  கட்டுமர மீனவர்கள் கடந்த வாரம் முதல் மீண்டும் கடலுக்கு சென்று வருகின்றனர். அவர்களின் கட்டுமர வலைகளில் நெத்திலி மீன்கள் அதிகமாக பிடிப்பட்டது. நேற்றும் கடலுக்கு சென்ற கட்டுமரங்களில் ஏராளமான நெத்திலி மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் அவற்றுகளை ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். காலையில் ₹. 1000 முதல் ₹. 1500 க்கு விலைபோன ஒரு குட்டை நெத்திலி மீன்கள் பின்னர் நேரம் செல்ல செல்ல ₹. 700 முதல் ₹. 1000 வரை விலை போனது. நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று குளச்சலில் நெத்திலி மீன்கள் மீண்டும் கிடைத்ததால் கட்டுமர மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி