கொல்லங்கோடு அருகே வள்ளவிளை மீனவ கிராமத்தில் இருந்து நேற்று (5-ம் தேதி) நள்ளிரவு மானிய விலை மண்ணெண்ணெயை ஏற்றிக் கொண்டு ஒரு சொகுசு வேன் கேரளா நோக்கி வருவதாக கொல்லங்கோடு தனிப்பிரிவு ஏட்டு சஜிகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கண்ணனாகம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த சொகுசு வேனை நிறுத்த சைகை காட்டிய போது டிரைவர் வேனை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதையடுத்து தனிப்பிரிவு ஏட்டுகள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பைக்கில் பின்னால் துரத்தி சென்று மார்ஷல்புரம் பகுதியில் வைத்து மடக்கி பிடித்து, சோதனை செய்து பார்த்த போது, சொகுசு வேனில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறையிலும், வேனின் உள்ள இருக்கையின் அடியிலுமாக 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 60 கேன்களில் என மொத்தம் 2100 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து தனிப்பிரிவு ஏட்டுகள் வேனையும், மண்ணெண்ணெய் மற்றும் வேனை ஓட்டி வந்த பொழியூர் பகுதியை சார்ந்த வில்சன் (48) என்பவரையும் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கொல்லங்கோடு போலீசார் டிரைவர், மண்ணெண்ணெய் மற்றும் வேனை நாகர்கோவில் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.