செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, அனந்தமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி பகுதியில், 25க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு நிரந்தர குடியிருப்பு இல்லாததால், விவசாயம் மற்றும் கூலி வேலைகளுக்கென, பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு சென்று, அங்கேயே தங்கி வேலை செய்து வந்தனர்.
இவர்களுக்கென நிரந்தர குடியிருப்பு இல்லாமல், ஓலை குடிசைகளில் வசித்து வந்தனர். இம்மக்கள், வெயில் மற்றும் மழைக் காலங்களில் இருந்து உடைமைகளை பாதுகாக்கும் வகையிலும், நிரந்தரமாக ஒரே கிராமத்தில் வசிக்கும் வகையிலும் நிரந்தர குடியிருப்புகள் கட்ட முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, பிரதம மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மாக அபியான் திட்டத்தின் கீழ், 2023 - -24ம் நிதி ஆண்டில், ஒன்பது இருளர் குடும்பங்களுக்கு தலா 5. 7 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் பணிகள் முடிவுற்று, இருளர் குடும்பத்தினரிடம் வீடு ஒப்படைக்கப்படும் என, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர் தெரிவித்தார்.