திருக்கழுக்குன்றத்தின் சுற்றுப்புறத்தில், 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு மறைமலை நகர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை பகுதிகளுக்கு, இப்பகுதியிலிருந்து ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
திருக்கழுக்குன்றத்தில் இருந்து, அப்பகுதிகளுக்கு செல்ல நேரடி பேருந்து சேவை இல்லை. கல்பாக்கம், மாமல்லபுரம் பகுதிகளுக்கு சென்று, செங்கல்பட்டு செல்லும் பேருந்தில் செல்கின்றனர்.
மேலும், பேருந்தில் பயணியர் கூட்டம் அதிகரித்து காணப்படும். நெரிசல் அதிகமாக இருப்பதால், பேருந்தில் எளிதில் ஏற முடியாமல் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை செல்வோர், செங்கல்பட்டு சென்று, அங்கிருந்து மற்றொரு பேருந்தில் ஏறி பயணம் செய்கின்றனர்.
இதை தவிர்க்க, திருக்கழுக்குன்றத்தில் இருந்து, அலுவலக நேரத்தில் தனி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.