மாமல்லபுரம் அடுத்த சாலவான்குப்பம் பகுதியில், 'புலிக்குகை' என்றழைக்கப்படும், 'அதிரணசண்ட' குடைவரை சிற்பங்கள் உள்ளன.
தொல்லியல் துறை பராமரித்து பாதுகாக்கிறது. இவ்வளாகத்தை ஒட்டிய வடபுறத்தில், நீண்டகாலமாக மணல்மேடு, சிறிய பாறைக்குன்றின் உச்சிப் பகுதி காணப்பட்டது.
இப்பகுதி, கடற்கரையை ஒட்டியுள்ள நிலையில், கடந்த 2004 டிசம்பரில், சுனாமி அலை நிலப்பகுதியில் உட்புகுந்தபோது, மணல்மேடு அரிக்கப்பட்டு, நிலத்தடியில் சிதைந்த நிலையில் செங்கற்களால் கட்டப்பட்ட பழங்கால கோவில் தெரிந்தது. பாறைக்குன்றும் முழுதாக வெளிப்பட்டது.
தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, பல்லவர் ஆட்சிக் காலத்திற்கும் முன்பே, இங்கு முருகன் கோவில் கட்டப்பட்டதை அறிந்தனர்.
அதன்மீதே, பல்லவர், சோழர் ஆகியோர், பாறைக்கற்களில் கட்டமைத்து புனரமைத்தது குறித்தும் அறிந்தனர். இக்கோவில் குறித்து, பாறைக்குன்றிலும் கல்வெட்டு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கோவிலுக்கு நிலம் தானம் வழங்கியது குறித்து, கன்னர தேவர், பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன், முதலாம் ராஜராஜசோழன் உள்ளிட்டோரின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கீரைப்பிரியனின் நன்கொடை, வசந்தனாரின் தீபமேற்றுதல் உள்ளிட்டவற்றுக்காக, பொற்கழஞ்சு காசுகள் அளிக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்கள், துாண்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்காலத்தில், இவ்வூர் 'திருவிழிச்சில்' என அழைக்கப்பட்டுள்ளது.