புறவழிச்சாலை ஓரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

84பார்த்தது
புறவழிச்சாலை ஓரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
அச்சிறுபாக்கம் அருகே, திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம், கடமலைப்புத்துார் ஊராட்சி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கடமலைப்புத்துார் புறவழிச்சாலையில் பிரிந்து, ஒரத்தி வழியாக வந்தவாசி, திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.

இங்கு, ஊராட்சி சார்பாக குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாலையோரம் கடை வைத்துள்ளவர்கள், குப்பை தொட்டியில் குப்பையை கொட்டுவதில்லை.

மாறாக, கடமலைப்புத்துார் புறவழிச்சாலை ஓரம், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், கோழி இறைச்சி கழிவுகள், உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள் உள்ளிட்டவற்றை கொட்டி வருகின்றனர்.

அவ்வாறு கொட்டப்படும் குப்பை கழிவுகளில், மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் புகையால், வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிவாசிகள் சுவாசப் பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர்.

மேலும், மழையில் குப்பை நனைந்து, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், அப்பகுதி முழுதும் துந்ராற்றம் வீசுகிறது. எனவே, குப்பையை முறையாக அகற்ற, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி