செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட கடப்பாக்கம், விளம்பூர், வெண்ணாங்குப்பட்டு, கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், அதிக அளவில் மா விவசாயத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில், பங்கனபள்ளி, அல்போன்சா, செந்துாரா, நீலம், ருமானியா மற்றும் ஒட்டுரக மாங்காய் என, பல்வேறு விதமான மாவகைகள் பயிரிடப்பட்டுள்ளன.
இப்பகுதியில் விளையும் மாங்காய் மற்றும் மாம்பழங்கள், தோட்டங்களில் சில்லரையாக அனுப்பி வைக்கப்படுவதோடு, மொத்தமாக லாரிகள் வாயிலாக சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு சில்லரை வியாபாரத்தில், ஒரு கிலோ பங்கனபள்ளி 70 - 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒட்டுரக மாம்பழம் 50 - 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ருமானியா மற்றும் ஒட்டுரக மாங்காய் போன்ற சமையலுக்கு பயன்படுத்தப்படும் மா வகைகளை அறுவடை செய்யும் பணியில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அவை, தோட்டத்தில் இருந்து அறுவடை செய்யப்பட்டு, நேரடியாக லாரிகள் வாயிலாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.