கூட்டு குடிநீர் திட்டம் கேளம்பாக்கத்தில் எதிர்ப்பு

67பார்த்தது
கூட்டு குடிநீர் திட்டம் கேளம்பாக்கத்தில் எதிர்ப்பு
திருப்போரூர் ஒன்றியம், கோவளம் பகுதிக்கு, 25 ஆண்டுகளாக தையூர் ஊராட்சியில் இருந்து இரண்டு கிணறு வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கடந்தாண்டு 'ஜல் ஜீவன் மிஷன்' கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, தையூர் பகுதியில் மீண்டும் இரு கிணறுகள் தோண்டி, அங்கிருந்து கோவளம் பகுதிக்கு குடிநீர் வழங்க பணிகள் துவக்கப்பட்டது.

இதற்கு தையூர் பகுதி வாசிகள் ஏரியை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை அடுத்து, கிணறு தோண்டும் பணி கைவிடப்பட்டது.

இந்நிலையில், கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வண்ணான் ஏரியில், இத்திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக, நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஏரியில் இயந்திரங்கள் மூலம் மண் மற்றும் நீர் பரிசோதனை பணி மேற்கொள்ளப்பட்டது.

இதையறிந்த பகுதி வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 'எங்கள் பகுதியில் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இத்திட்டத்தால், மேலும் பாதிப்பு ஏற்படும்' என தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு சார் - ஆட்சியர் நாராயண சர்மா, அவர்களுடன் பேச்சு நடத்தினார். பின், அமைதி கூட்டம் ஏற்பாடு செய்து, உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் திட்டம் செயல்படுத்தப்படும். இல்லையென்றால் கைவிடப்படும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி