காஞ்சிபுரம் மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மாநகராட்சி ஊழியர்கள் 100 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 300க்கும் மேற்பட்டோர், துப்புரவு பணியாளர்களாக உள்ளனர்.
இவர்கள், காலை, இரவு என இரு ஷிப்டுகளில், மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மாதந்தோறும் சரிவர சம்பளம் வழங்கவில்லை என ஏற்கனவே போராட்டம், மறியல் போன்றவை நடத்தி வருகின்றனர்.
அதே சமயம், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் மாநகராட்சி நிர்வாகம் வழங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது. இரவு நேரத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஒளி எதிரொலிக்கும் ஜாக்கெட்டுகள், கையுறைகள் ஆகியவை வழங்கப்பட வேண்டும். அதேபோல, பேருந்து, கனரக வாகனங்கள் செல்லும் சாலையில் பணியாற்றும் போது, எச்சரிக்கை தடுப்புகள், அறிவிப்புகள் காட்டும் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
ஆனால், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி துப்புரவு பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். எச்சரிக்கை அறிவிப்புகள் இன்றி பணியாற்றும்போது, இவர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.