சூனாம்பேடு அருகே அனுமதியின்றி அரசு மதுபானம் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட புத்திரங்கோட்டை பகுதியில் சூனாம்பேடு காவல் ஆய்வாளர் அமிர்தலிங்கம் தலைமையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை சோதனைக்காக தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அந்த வாலிபர் போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து கடந்து சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பின் தொடர்ந்து விரட்டி மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரது வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தில் 180 எம்எல் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மதுபான பாட்டில்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து போலீசார் வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் புத்திரங்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வமணி மகன் ராஜேஷ் (25) என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சூனாம்பேடு போலீசார் ராஜேஷை கைது செய்து அவரிடமிருந்து அரசு மதுபான பாட்டில்கள் மற்றும் அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.