விஷ ஜந்துக்களின் புகலிடமான சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி

70பார்த்தது
விஷ ஜந்துக்களின் புகலிடமான சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி
காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், பாலூர் கிராமத்தில் சிங்கபெருமாள் கோவில் செல்லும் சாலையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதே வளாகத்தில் பாலூர் கிராம நிர்வாக அலுவலகம், பாலூர் ஊராட்சி அலுவலகம் இயங்கி வருகின்றன.

இந்த வளாகத்தில் முன்பக்கம் மற்றும் வலது புறத்தில் மட்டும் சுற்றுச்சுவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. மற்ற இடங்களில் சுற்றுச்சுவர் இல்லாததால், நாய், ஆடு உள்ளிட்ட கால்நடைகள் வந்து செல்கின்றன. மேலும், பள்ளியை சுற்றி புதர்மண்டி உள்ளதால், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். சுவர் இல்லாததால் பள்ளி ஆசிரியர்கள் கவனிக்காத நேரங்களில் குழந்தைகள் நெடுஞ்சாலைகளில் செல்லும் நிலை உள்ளது.

எனவே, பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பழைய சுற்றுச்சுவரில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்தி