காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலை, வேளிங்கப்பட்டரையில், வேகவதி ஆற்றின் குறுக்கே சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பாலத்திற்கு இருபுறமும் இருந்த 'கான்கிரீட்' பாதுகாப்பு தடுப்புச்சுவர், 2011ம் ஆண்டு, 'தானே' புயலின்போது வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக விழுந்து விட்டது. இதையடுத்து, இப்பாலத்தின் மேற்கு பகுதியில் மட்டும் இரும்பு சட்டங்களால் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கிழக்கு பகுதியில் தடுப்புச்சுவர் இல்லாததால், இச்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் சிறுபாலத்தை கடக்கும்போது விபத்து ஏற்படும் சூழல் இருந்தது.
எனவே, வேளிங்கப்பட்டரை சிறுபாலத்தின் கிழக்கு பகுதிக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், வேளிங்கப்பட்டரையில் வேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள சிறுபாலத்தின் கிழக்கு பகுதிக்கு 40 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.