காஞ்சிபுரம் ஹாஸ்பிட்டல் சாலையில், அரசு கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கால்நடை வளர்ப்போர், சுகவீனம் அடைந்த தங்களது ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், கால்நடை மருத்துவமனையை, துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், மருத்துவமனை வளாகத்தில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளது. இதனால், பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் புதரில் தஞ்சமடையும் சூழல் உள்ளது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல்வேறு பிரிவு கட்டடங்களில் அரசமர செடிகள் செழித்து வளர்ந்துள்ளன. இச்செடிகளின் வேர்கள் சுவர்களில் வேரூன்றி வளர்வதால், கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் கட்டடம்வலுவிழந்து இடிந்து விழும் சூழல் உள்ளது. எனவே, மருத்துவமனை வளாகத்தில் புதர்போல மண்டி கிடக்கும் செடி, கொடிகளையும், கட்டடத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளையும் வேருடன் அகற்ற கால்நடை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.