மாநகராட்சி பிரச்னைகளால் அதிகாரிகளுக்கு தலைவலி

60பார்த்தது
மாநகராட்சி பிரச்னைகளால் அதிகாரிகளுக்கு தலைவலி
காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி. மு. க. , வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, வரும் 29ம் தேதி, நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் மற்றும் அவர் பதவி மீதான ஓட்டெடுப்பும் நடக்க உள்ளது.

மேயருக்கு எதிராக, 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையே, கமிஷனர் செந்தில்முருகனை கடந்த 22, 23 ஆகிய இரு நாட்கள் அவரது அறையில், கவுன்சிலர்கள் முற்றுகையிட்டனர்.

மாநகராட்சி அலுவலகம் வெளியே, பந்தல் போட்டு தர்ணா போராட்டமும் கவுன்சிலர்கள் நடத்தினர். இந்நிலையில், இரண்டு நாட்கள் நடந்த போராட்டத்தை, அதிருப்தி கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் இரவு முடித்துக் கொண்டனர்.

இதனால், மாநகராட்சி அதிகாரிகள் நிம்மதியடைந்தனர். கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்களும் பரபரப்பாக இருந்த மாநகராட்சி அலுவலகம் நேற்று வழக்கம்போல் இயங்கியது.

மேயர்- - கவுன்சிலர்கள் இடையேயான பிரச்னை தொடர்ந்து நீடிப்பதால், அதிகாரிகளிடம் கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்வது, முற்றுகையிடுவது, தர்ணா போராட்டம் நடத்துவது போன்ற சம்பவங்கள், எட்டு மாதங்களாக அதிகளவில் நடந்துள்ளது.

இச்சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து பணியிட மாற்றம் செய்து கொண்டு, வேறு மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும் என, அதிகாரிகள் பலரும முயற்சிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி