கள்ளக்குறிச்சி பி. டி. ஓ. , அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 2வது மாவட்ட மாநாடு நடந்தது.
மாநாட்டிற்கு, மாவட்ட தலைவர் ஆனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கொளஞ்சிவேலு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் மாநில செயலாளர் அண்ணா குபேரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கை குறித்து மாவட்ட பொருளாளர் ரவி பேசினார். மாநிலத் தலைவர் (பொறுப்பு) டானியல் ஜெயசிங், முன்னாள் மாநில துணைத் தலைவர் தங்கராசு சிறப்புரையாற்றினர். மாநாட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண் விடுப்பு பெறுதல், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சுகாதாரத்துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் என். ஹச். எம். , ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவர்கள் செந்தில் முருகன், ஆறுமுகம், வீரபுத்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.