கள்ளக்குறிச்சி மாவட்டம், வேப்பூர் அடுத்த நிராமணியைச் சேர்ந்தவர் தங்கராசு, 70; இவர், கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் முன் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை மற்றும் ரத்தமாதிரி பரிசோதனையில், தங்கராசு கள்ளச்சாராயம் குடித்து இறந்தது தெரிந்தது. அதையடுத்து, மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்த வழக்கில் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள 4 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின்படி சிறையில் உள்ள கதிரவன், 30; ஜோசப், 40, சின்னதுரை, 36; ஆகிய 3 பேரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது.
அதன்பேரில், மூவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி ஹரிஹரசுதன் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கள்ளக்குறிச்சி டி. எஸ். பி. , தேவராஜ் மூவரிடமும் தனி, தனியாக விசாரணை மேற்கொண்ட நிலையில், போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. கள்ளக்குறிச்சி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட மூவரையும் வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிபதி (பொறுப்பு) ரீனா உத்தரவிட்டார்.