ஈரோடு சம்பத் நகரில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுந்தரா இன்று (பிப்ரவரி 05) காலை 7 மணிக்கு வாக்குச் செலுத்துவதற்காக வந்திருந்தார். மாற்றுத்திறனாளி ராமலிங்கம் என்பவர் முதல் நபராக வாக்களைப் பதிவு செய்தார்.
அப்போது வாக்குச் செலுத்த காத்திருந்த கலெக்டர், ராஜகோபால் சுந்தராவை வாக்களிக்க வந்த வயதான தம்பதியினர் இனிப்புகளை வழங்கி ஆசிர்வாதம் செய்தனர். தொடர்ந்து 2-வது நபராக வாக்களித்த ராஜகோபால் சுந்தரா தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். இதைத்தொடர்ந்து கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுந்தரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: -காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வாக்காளர்களும் 12 வகை ஆவணங்களில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றலாம். 237 வாக்குச்சாவடிகளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மத்திய துணை ராணுவம் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 9 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.