பெருந்துறை அருகே வீடு கட்டுமான பணியின் போது மூங்கில் தலையில் விழுந்து வட மாநில தொழிலாளி பரிதாபமாக இறந்த சம்பவம் தொடர்பாக பரிந்துரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை, மருத நகர் பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணியில் மேற்கு வங்க மாநிலம் தெற்கு பர்கானா மாவட்டத்தை சேர்ந்த பிஸ்வஜித் (40) என்பவரும், அவருடைய உறவினரான தபன்ரஞ்சித் (36) என்பவரும்
வேலை பார்த்து வந்தனர். நேற்று காலை, தபன்ரஞ்சித் கட்டிடத்தின் 2-வது மாடிக்கு சென்று அங்கிருந்த முட்டு மூங்கில்களை பிரித்து தரையில் போட்டு கொண்டிருந்தார்.
அப்போது தரையில் நடந்து சென்ற பிஸ்வஜித்தின் தலை மீது மேலே இருந்து போடப்பட்ட மூங்கில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பிஸ்வஜித் உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,