

பண்ணாரி கோயிலில் மறுபூஜை காணிக்கை ரூ. 46.50 லட்சம்
பண்ணாரி மாரியம்மன் கோயிலில் மறுபூஜைக்கு வந்த பக்தர்கள் காணிக்கையாக ரூ. 46.50 லட்சம் செலுத்தியிருந்தனர். சத்தியம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் விழா கடந்த 8ம் தேதி நடைபெற்றது. பூச்சாட்டு முதலே தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்ணாரி மாரியம்மனை வழிபட்டு உண்டியல்களில் காணிக்கைகளை செலுத்திச் சென்றனர். பின்னர் அனைத்து உண்டியல்களையும் நேற்று (15ம் தேதி) காலை துணை ஆணையர் மேனகா முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ. 46 லட்சத்து 50 ஆயிரத்து 291, தங்கம் 57 கிராம், வெள்ளி 479 கிராம் இருந்தது. நிகழ்ச்சியில் ஈரோடு உதவி ஆணையர் சுகுமார், சத்தியம் ஆய்வாளர் சங்கரகோமதி, பண்ணாரி கோயில் கண்காணிப்பாளர்கள் யோகலட்சுமி, சங்கர், அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள், மற்றும் பல்வேறு சேவை அமைப்பினர் கலந்துகொண்டனர். குண்டம் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 9ம் தேதி சுமார் ரூ. 1.2 கோடி வசூலாகியிருந்தது. அன்று முதல் நேற்று (15ம் தேதி) வரை 6 நாட்களில் மட்டும் ரூ. 46.50 லட்சம் வசூலாகியிருந்தது. மொத்தம் இந்த ஆண்டு குண்டம் திருவிழாவில் மட்டும் ரூ. 1.48 கோடி வரை வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.