ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கேதீஸ்வரன். இவருடைய மகன் ராகவன் என்கிற கோழிக்கரன் (வயது 26). இவர் மீது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுள்ளியா போலீஸ் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த அவரை நேற்று முன்தினம்(அக்.4) நள்ளிரவு 1 மணி அளவில் சுள்ளியா போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை வாகனத்தில் ஏற்றி கர்நாடக மாநிலத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது திடீரென அவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.