மழை நீர் எண்ணமங்கலம் ஏரியின் பிரதான நீர்ப்பிடிப்பு பகுதியாக வழுக்குப்பாறை இருந்து வருகிறது.
வழுக்குப்பாறையிலிருந்து, செலம்பூரம்மன் கோவில், பூஞ்சோலை தோட்டம் பகுதியிலுள்ள பள்ளம் வழியாக எண்ணமங்கலம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மலைப் பகுதியில் பெய்த கனத்த மழையால், செலம்பூரம்மன் கோவில் அருகிலிருந்த பாலமும், பூஞ்சோலை தோட்டம் அருகே இருந்த பள்ளம் உடைந்தது.
உடைப்பு காரணமாக, எண்ணமங்கலம் ஏரிக்கு செல்லும் மழைநீர், கோவிலுார் பள்ளம் வழியாக பூனாச்சி, சித்தார் சென்று, காவிரியாற்றில் கலக்கிறது. இரண்டாண்டுகளாக, இவ்வழியாக மழைநீர் வராததால், எண்ணமங்கலம் ஏரி நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், கனத்த மழை பெய்யும் நேரத்தில், பூஞ்சோலை தோட்டம் வழியாக வெளியேறும் வெள்ளம், கோவிலுார், குன்னிக்காடு உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள ஊர்களிலுக்குள் புகும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், செலம்பூரம்மன் கோவில் பாலம், பூஞ்சோலை தோட்ட பள்ளத்தை கட்டித்தர வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கடந்த ஓராண்டுக்கும் மேல் கோரிக்கை விடுத்தும் பயனில்லை.
ஆத்திரமடைந்த எண்ணமங்கலம், கோவிலுார் பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகள், அந்தியூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.