திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி ஒன்றியம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சிகளில் உள்ள 149 பெண் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவருமான எஸ். காந்திராஜன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். இதில் 15 ஊராட்சி சேர்ந்த 149 தூய்மை பணியாளர்களுக்கும் 5 கிலோ எடை கொண்ட அரிசி பை, பருப்பு, ஆயில், மசாலா பொருட்கள் அடங்கிய மளிகை சாமான்கள், தூய்மை பணியாளர் சீருடை, தூய்மை பணியாளருக்கான பாதுகாப்பு உபகரணங்களை எம் எல் ஏ வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வடமதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டி, அய்யலூர் நகர செயலாளர் கருப்பன், வடமதுரை நகர செயலாளர் கணேசன், நெசவாளர் அணி அமைப்பாளர் சொக்கலிங்கம், இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, ஒன்றிய துணைச் செயலாளர் ஆனந்தி அறிவு கண்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன் போன்ற கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.