தனியாா் சிமென்ட் ஆலை லாரிகள் சிறை பிடிப்பு

59பார்த்தது
தனியாா் சிமென்ட் ஆலை லாரிகள் சிறை பிடிப்பு
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்து டி. கூடலூா் பகுதியில் புதிதாக தனியாா் சிமென்ட் ஆலை செயல்படுகிறது. இந்த ஆலைக்குத் தேவையான மூலப் பொருள்கள், பாளையம் ரயில் நிலையத்திலிருந்து லாரிகள் மூலம் ஏற்றிச் செல்லப்படுகிறது. லாரிகளிலிருந்து வெளியேறும் தூசு, சாலையோரம் முழுவதும் படிந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

மேலும், சுற்றுப்புற பகுதிகளிலும் பரவும் சிமென்ட் தூசுகள் புற்கள் மீது படா்கின்றன. இந்த புற்களை உண்ட பல ஆடுகள் உயிரிழந்துவிட்டதாகவும் அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனா்.

இந்த நிலையில், சிமெண்ட் ஆலைக்கு மூலப் பொருள்களை ஏற்ற வந்த லாரிகளை, சாலையில் கற்கள் வைத்தும், இரு சக்கர வாகனங்களை நிறுத்தியும் வழிமறித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், நீண்ட நேரமாக லாரிகள் நடுவழியில் நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். பேச்சுவாா்த்தைக்கு பின் கற்கள், இருசக்கர வாகனங்கள் அகற்றப்பட்டு, லாரிகள் விடுவிக்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி